S.I.U.C காலை ஆராதனை முறைமை
ஆ.ந : அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.
சபை : கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது. சங்கீதம் 100:4,5
ஆ.ந : நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.
சபை: அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே. சங்கீதம் 95:6,7
ஆ.ந : யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?
சபை: கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே. சங்கீதம் 24:3,4
ஆ.ந : அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம். ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு. தானியேல் 9:9,10
சபை : தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். சங்கீதம் 51:1
ஆ.ந : வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத்தேயு 11:28
சபை : நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். லூக்கா 15:18
யாவரும் : என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்துக்குப் பிரியமாய் இருப்பதாக. சங்கீதம்19:14
பாவ அறிக்கை
பிரியமான சகோதரரே, நம்முடைய பரம பிதாவாகிய சர்வ வல்லமையுள்ள கடவுளின் அளவில்லாத தயவினாலும் இரக்கத்தினாலும், பாவ மன்னிப்பைப் பெறுவதற்காக, நாம் செய்த பலவிதமான பாவங்களையும் அக்கிரமங்களையும் அவர் சந்நிதியில் மறைக்காமல், பணிவும் தாழ்மையும் துக்கமும் கீழ்ப்படிதலுமுள்ள இருதயத்தோடே அறிக்கையிடப் பற்பல வேத வாக்கியங்கள் நம்மை ஏவுகின்றன. நாம் எக்காலத்திலும் கடவுளுக்கு முன்பாக நம்முடைய பாவங்களை மனத்தாழ்மையாய் அறிக்கையிட வேண்டுவதுமன்றி, அவருடைய திருக்கரங்களிலிருந்து, நாம் பெற்றுக் கொண்ட மேன்மையான உபகாரங்களுக்காக நன்றி செலுத்தவும், அவரை மிகவும் சிறப்பாய்ப் புகழ்ந்து பிரஸ்தாபம் பண்ணவும், அவருடைய திருவசனத்தைக் கேட்கவும், நம்முடைய உடலாவிக்குத் தேவையானவைகளுக்காக வேண்டிக்கொள்ளவும் நாம் கூடி வந்திருக்கிற இத்தருணத்தில் பாவங்களை அறிக்கையிடுவது நமது விஷேசித்த கடமையாம். ஆகையால் இங்கே இருக்கிற நீங்கள் யாவரும் சுத்த இருதயத்தோடும் தாழ்ந்த மனதோடும் பரம கிருபாசனத்தண்டையில் என்னுடனே கூடச் சேர்ந்து பாவ அறிக்கையைச் சொல்ல உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
பொதுவான பாவ அறிக்கை
சர்வ வல்லமையும் மிகுந்த இரக்கமுள்ள பிதாவே, தப்பிப் போன ஆடுகளைப் போல உம்முடைய வழியை விட்டு அலைந்து போனோம். எங்கள் இருதயத்தின் விருப்பங்களுக்கும் யோசனைகளுக்கும் விருப்பங்களுக்கும் மிகவும் இணங்கி நடந்தோம். உமது பரிசுத்த கற்பனைகளுக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தோம் செய்யத்தக்கவைகளைச் செய்யாமல் செய்யத்தகாதவைகளைச் செய்து வந்தோம். ஆனாலும் ஆண்டவரே எங்களுக்குச் சுகமேயில்லை. ஆனாலும் ஆண்டவரே தேவரீர் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் மனிதருக்கு அருளிச் செய்த வாக்குதத்தங்களின் படியே நிர்பாக்கியமுள்ள குற்றவாளியாகிய எங்களுக்கு இரங்கும். தப்பிதங்களை அறிக்கையிடுகிற எங்கள் மேல் பொறுமையாயிரும் பாவத்தினிமித்தம் துக்கப்படுகின்ற எங்களைச் சீர்படுத்தும். மிகவும் இரக்கமுள்ள பிதாவே, உம்முடைய பரிசுத்த நாமத்துக்கு மகிமையுண்டாகும்படி, நாங்கள் இனித் தேவ பக்தியும், நீதியும் தெளிந்த புத்தியும் உள்ளவர்களாக நடந்து வர இயேசு கிறிஸ்துவினிமித்தம் எங்களுக்குகிருபை செய்தருளும். ஆமென்.
பாவ மன்னிப்பைக் கூறும் வசனங்கள்
சர்வ வல்லமையும், மிகுந்த இரக்கமுள்ள ஆண்டவர் மன்னிப்பையும் பாவ நிவிர்த்தியையும் உங்களுக்கு கட்டளையிட்டருளி வாழ்வை சீர்படுத்துவதற்கான காலத்தையும், தமது பரிசுத்த ஆவியின் கிருபையையும், தேற்றரவையும் தந்தருள்வாராக.
பொதுவான ஸ்தோத்திர ஜெபம்
சர்வ வல்லமையுள்ள கடவுளே, சர்வ ஜீவ தயாபர பிதாவே, அபாத்திரரான உமது அடியாராகிய எங்களுக்கும் மற்றெல்லா மனிதருக்கும், தேவரீர் அருளிச் செய்த பற்பல கிருபைக்காகவும், அன்புள்ள தயவுக்காகவும், நாங்கள் மிகுந்த தாழ்மையோடும் முழு இருதயத்தோடும் உமக்கு தோத்திரம் செலுத்துகிறோம். எங்களைச் சிருஷ்டித்ததற்காகவும் காப்பாற்றுகிறதற்காகவும் இம்மைக்குரிய எல்லா ஆசிர்வாதங்களுக்காகவும் உம்மைத் துதிக்கிறோம், விசேஷமாய் எங்கள் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினாலே உலகத்தை மீட்டுக்கொண்ட விலைமதியாத உமது அன்புக்காகவும், கிருபையின் யத்தனங்களுக்காகவும், மகிமையடைவோம் என்கிற நம்பிக்கைக்காகவும், உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். நாங்கள் உண்மையாய் நன்றியறிந்த இருதயமுள்ளவர்களாயிருக்கவும், எங்களை உமது ஊழியத்திக்கு ஒப்புக்கொடுத்து, எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கு முன்பாகப் பரிசுத்தமும் நீதியுள்ளவர்களாய் நடக்கவும், எங்கள் வாக்கினாலே மாத்திரமல்ல எங்கள் நடக்கையினாலேயும் உம்முடைய புகழைப் பிரஸ்தாபப்படுத்தவும் தேவரீர் செய்த உபகாரங்கள் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ளும் உணர்வை எங்களுக்கு அருளிச் செய்ய வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். அவருக்கும் தேவரீருக்கும் பரிசுத்த ஆவிக்கும் எல்லா மேன்மையும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக.
அல்லது நன்றி கூறும் கீதம் ஒன்று பாடலாம்
சங்கீதங்கள்
பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமையுண்டாவதாக
ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக – ஆமென்
அல்லது
தந்தை தனைய ரோடுமே
சாரும் பரிசுத்தாவிக்கும்
எந்த நாளும் மகிமையே
இனிது இருப்பதாகுக
கற்பனைகள்
யாவரும் : ஆண்டவரே எங்களுக்கிரங்கி இந்தக் கற்பனைகளைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.
அல்லது
கர்த்தா எம் நெஞ்சிலிந்தக் கற்பனைகள் யாவையுமே
நித்தம் பதித்தருள்க, நேசப் பரம்பொருளே
குருவானவர்
நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனங்களையும் நமது ஆண்டவர் தொகுத்து அருளியது: இஸ்ரவேலே கேள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்; உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழு பலத்தோடும் அன்பு கூறுவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால் உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக என்பதே. இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்பதே. (மாற்கு 12:29-31, மத்தேயு 22:36-40)
யாவரும் : ஆண்டவரே எங்களுக்கிரங்கி இந்தக் கற்பனைகளைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.
கர்த்தா எம் நெஞ்சிலிந்தக் கற்பனைகள் யாவையுமே
நித்தம் பதித்தருள்க, நேசப் பரம்பொருளே
வேத வாசிப்பு
அப்போஸ்தலர் விசுவாசப் பிரமாணம்
வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்:
அவருடைய ஒரே குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசுகிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, பாதாளத்தில் இறங்கினார்: மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார்: பரமண்டலத்துக்கேறி, சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்; அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்.
பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன், பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும்; பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும்; பாவ மன்னிப்பும்; சரீர உயிர்த்தெழுதலும்; நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன். ஆமென்
சங்கீத முறைமை
உலகும் வானும் செய்தாளும் ஒப்பில் சர்வ வல்லவராய்
இலகுமருளாம் தந்தையாம் எம்பிரான்றனை நம்புகிறேன்.
அவரொரு பேறாமைந்தனுமாய் ஆதி முதலெங்கர்த்தனுமாய்த்
தவறிலேகக்கிறிஸ்துவையும் சந்ததமே யான் நம்புகிறேன்.
பரிசுத்தாவி அருளதனால் படிமேல் கன்னிமரியிடமாய் உருவாய்
நரரவதாரமாய் உதித்தாரெனவும் நம்புகிறேன்.
பொந்தியுபிலாத்ததி பதிநாளில் புகலரு பாடுகளை யேற்று உந்துஞ்
சிலுவையிலறையுண்டு உயிர்விட்டா ரென நம்புகிறேன்.
இறந்தே அடங்கிப்பாதாளம் இறங்கி மூன்றாந் தினமதிலே
இறந்தோரிடநின்றே உயிரோடெழுந்தாரெனவும் நம்புகிறேன்.
சந்ததமோட்சம் எழுந்தருளிச் சருவவல்ல பரனான எந்தை
தன்வல பாரிசமேயிருக்கின்றாரென நம்புகிறேன்.
உயிருள்ளோரை மரித்தோரை உத்தமஞாயந் தீர்த்திடவே
ஜெயமாய்த் திரும்பவரு வாரெனச் சிந்தையார நம்புகிறேன்.
பரிசுத்தாவியை நம்புகிறேன். பரிசுத்தமாபொதுச்சபையும்
பரிசுத்தர்களின் ஐக்கியமும் பரிவாயுண் டென நம்புகிறேன்.
பாவ மன்னிப்புளதௌவும் மரித்தோருயிர்த் தெழுவாரெனவும்
ஓவா நித்தியசீவனமே உளதெனவும் யான் நம்புகிறேன்.
மன்றாட்டுப் பிரார்த்தனைகள்
(அந்த நாளுக்குரிய சுருக்க ஜெபமும் இதர ஜெபங்களும்)
ஆண்டவர் அருளிய பிரார்த்தனை
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல, பூமியிலேயும் செய்யப்படுவதாக. அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல, எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களை சோதனைக்குள் பிரவேசிக்கப் பண்ணாமல் தீமையினின்று இரட்சித்துக் கொள்ளும். இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
விளம்பரம்
காணிக்கை கீதம்
காணிக்கைப் பிரார்த்தனை
மிகுந்த இரக்கமும் கிருபையுமுள்ள கடவுளே, உம்மிடத்தில் நாங்கள் எல்லோரும் பெற்ற நன்மைகள் அதிகம். நாங்கள் படைக்கும் காணிக்கையை நீர் அங்கீகரிக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம் இதன் மூலமாய் மனிதருக்குள்ளே பிரியமும் சமாதானமும் பெருகவும், எங்கள் ஆண்டவரும் இரட்கருமாகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்ஜியம் பரப்பவும் இக்காணிக்கையை ஆசிர்வதிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.
அருட்பிரகாசத்திற்காகப் பிரார்த்தனை
வல்ல கடவுளே, எங்கள் கால்களுக்குத் தீபமும் எங்கள் பாதைக்கு வெளிச்சமுமாயிருப்பதற்காகத் திருவசனத்தைத் தந்தீர். பரம பிதாவே, நாங்கள் அதைச் சரியாய் உபயோகிக்கும்படி அருளையும் உத்தம குணத்தையும் கட்டளையிட்டருளும். நாங்கள் உமது வேதத்தை அறிந்து கொள்ளும்படி உமது பரிசுத்த ஆவியினால் எங்கள் இருதயத்தையும் மனதையும் திறந்தருளும். இன்றைக்கும் உமது திருவசனத்தை நாங்கள் சொல்லும்போதும் கேட்கும்போதும் எங்களை ஆசிர்வதியும். இவைகளை இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உம்மை வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.
ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும்
ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும்
நொறுக்கும், உருக்கும், உருவாக்கி நிரப்பும்
ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும்
அருளுரை
கீதம்
பிரார்த்தனை
சர்வ வல்லமையுள்ள கடவுளே, இன்று நாங்கள் காதாலே கேட்ட வாக்கியங்கள் பலனற்றதாய்ப் போகாமால், உம்முடைய நாமத்துக்குக் கனமும் புகழும் உண்டாவதற்கு ஏதுவாக நன்னடக்கையாகிய கனியைக் கொடுக்கும்படி, உம்முடைய கிருபையால் அந்த வாக்கியங்களை எங்கள் இருதயத்திலே பதித்தருள வேண்டுமென்று , எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.
ஆசிர்வாதம்
ஆண்டவர் உங்களை ஆசிர்வதித்து உங்களைக் காக்கக் கடவர். ஆண்டவர் தம்முடைய முகத்தை உங்கள் மேல் பிரகாசிக்கப் பண்ணி உங்கள் மேல் கிருபையாயிருக்கக் கடவர். ஆண்டவர் தம்முடைய முகத்தை உங்கள் மேல் பிரகாசிக்கப் பண்ணி உங்கள் மேல் பிரசன்னமாக்கி, உங்களுக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர். ஆமென்
அல்லது
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும், பிதாவாகிய தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியின் ஐக்கியமும் உங்களனைவரோடும் இருப்பதாக. ஆமென்