1. தீயோர் சொல்வதைக் கேளாமல் பாவத்துக்கு விலகி, பரிகாசரைச் சேராமல் நல்லோரோடு பழகி, கர்த்தர் தந்த வேதம் நம்பி வாஞ்சை வைத்து, அதைத்தான் ராப் பகலும் ஓதும் ஞானி என்றும் வாழும் பாக்கியவான். 2. நதி ஓரத்தில் வாடாமல் நடப்பட்டு வளர்ந்து, கனி தந்து, உதிராமல் இலை என்றும் பசந்து, காற்றைத் தாங்கும் மரம்போல அசைவின்றியே நிற்பான்; அவன் செய்கை யாவும் வாய்க்க ஆசீர்வாதம் பெறுவான். 3. தீயோர், பதர்போல் நில்லாமல் தீர்ப்பு நாளில் விழுவார்; நீதிமான்களோடிராமல் நாணி நைந்து அழிவார்; இங்கே பாவி மகிழ்ந்தாலும் பாவ பலன் நாசந்தான்; நீதிமான் இங்கழுதாலும் கர்த்தர் வீட்டில் வாழுவான்.